அதிர்ச்சி வேண்டாம்; வலைப்பதிவில் சுந்தர ராமசாமியின் ஏஜெண்ட் [நன்றி: பாலபாரதி], புளியமரம் தங்கவேலே சொன்னது தான் தலைப்பில் இருப்பது.

நேற்று மயிலாப்பூர் சங்கீதாவில், நடந்த குறுவலைப்பதிவாளர் சந்திப்பில் நடந்தது தான் இது. நான், அமெரிக்க மாப்பிள்ளை ப்ரியன்(நன்றி: வரவனை செந்தில்), தலை பாலபாரதி, தோப்புக்காரர் தங்கவேல் (தனிப் புளியமரம் தோப்பாகாது என்று அவர், கதறக் கதறச் சொன்னாலும் நேற்று பாலா சூட்டிய புதிய பெயர் இது!) நால்வரும் உணவுக்கு ஆர்டர் கொடுக்குமுன்னமேயே அந்தப் பிரச்சனை துவங்கியது.

எதையோ பேசும்போது, வழக்கம்போல, நான் தான் ஆரம்பித்து வைத்தேன். “உங்க சு.ரா. மாதிரி மேஜிகல் ரியலிஸம்..” என்று தொடங்கிய ஒரு வாக்கியத்தை நான் சொல்லவும், தங்கவேல் உடனடியாகக் கொதித்தெழுந்து விட்டார்.

“சுந்தர ராமசாமி மேஜிகல் ரியலிஸம் எல்லாம் பேச மாட்டார்! அதெல்லாம் பின்நவீனத்துவவாதிகள் பேசுவது” என்றார்.

உடனே நம்ம பாலபாரதி, “அப்ப சு.ரா. பேசுவது நவீனத்துவம் இல்லங்கிறீங்களா?” என்று கேட்க,

தங்கவேல் உடனடியாக, “சு.ரா. ஒரு யதார்த்தவாதி” என்றாரே பார்க்கலாம்!

அவ்வளவு தான், அடுத்த பத்து இருபது நிமிடங்கள், பாலாவும் தங்கவேலும், யதார்த்தவாதம், மாயாவாத யதார்த்தவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், குண்டூசிநவீனத்துவம் என்று பேசிக் கொண்டே போக, நானும் ப்ரியனும், எதார்த்தவாதிகளாக மெனு கார்டை நோண்டத் தொடங்கினோம்.

ஒரு கட்டத்தில், “சு.ரா ஒரு நவீனத்துவ யதார்த்தவாதி” என்ற முடிவை தங்கவேல் அறிவிக்க, “இப்ப மட்டும் சுகுணா திவாகர் இங்க இருந்தா நல்லார்ந்திருக்குமே! ” என்று நான் வருத்தப்பட்டுக் கொண்டேன்.

பக்கத்து டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மதர்குலம் – அதாங்க, ஆங்கிலத்திலேயே பேசும் சென்னை தாய்க்குலம் – விட்டால் கையை நீட்டி பாலாவின் தலையில் படுஜோராக ஒரு குட்டு குட்டிவிடுவார் போல் இருந்தது. அந்தக் கண்கொள்ளாக் காட்சிக்காக நான் காத்திருக்கையில், அந்தப் பெண்மணி பொறுமை இழக்க சில நொடிகள் முன்பு, சர்வர் வந்து ஆர்டர் கேட்டதால், பாலா மயிரிழையில் உயிர் தப்பித்துவிட்டார்..

ஞாயிறன்று கல்யாணச் சாப்பாடு சாப்பிடப் போன இடத்தில் கூட பாலாவைப் பேச விடாமல் எங்கிருந்தோ ஒரு அனானிக் குரல் வரவும், “கொலசாமிக்குப் படையல் வச்சிடறேன்” என்று கும்பிடு போட்டுக் கொண்டு, தங்கவேலுக்கு வழிவிட்டு, மௌனமாக சாப்பிட்டார். பாலாவின் கருத்துச் சுதந்திரத்திற்கு இத்தனை தொல்லையா! கொலசாமிகள் தான் காப்பாத்தணும்…

தமிழ்வலைப்பதிவுகளில், பின்நவீனத்துவத்தின் பாதுகாவலரான வெளியே மிதக்கும் ஐயா [நன்றி: பின்னூட்டம் பாலா 🙂 ], தங்கவேல் சொன்னதைப் பற்றி தங்கள் கருத்து என்னவோ?